
தண்டிலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முளவின் ஏங்க
குவளை தன் விழித்து நோக்கி
தெண்டிரை எழினி காட்ட
தேன் பிறை மகர யாழின்
வண்டுகள் இனிது பாட வீற்றிருக்கும்
மாமருதத் தேரே
தருவாயா சில நிமிடம்
கவி ஒன்று நான் படைக்க
யாழை முன் நிறுத்தி பாணத்தை உட்செலுத்தி
தெற்காசிய அதிசயத்தை தன்னக்தே கொண்டிருக்கும்
சங்கிலிய தலைநகரே
இயல் இசை நாடகத்தின் இருப்பிடமே
தென்னைகள் குழல் இசைக்க
பனைகள் பறந்தாட
கிளுவைகள் தலையசைக்கும்
யாழ் மண்ணில் கால் பதித்தால் உடலெல்லாம் கிளுகிளுக்கும்.
வடக்கால போய் பார் நல்லூரான் தெரிந்திடுவார்
தெற்கால போய்பார் சன்னதியான் கூப்பிடுவார்
பாடல் பெற்ற தலங்களிற்கு பஞ்சமில்லை யாழிலே
ஏழரை மணியானால் புத்தக மூட்டையுடன்
பள்ளி தாமரைகள் பளபளவென்று பவனிவரும்
யாழ்மண்ணே கமகமக்கும்.
இதுபோக பகுதிநேர வகுப்பென்று மதிவண்டி நங்கைகள்
மிதந்து வரும் காட்சிகளை
பொறுக்காத ஆடவர்கள்
அக்கறை நிமித்தத்தில்
வீடு சென்று வழியனுப்பும்
காட்சிகள் ஒவ்வொன்றும் விநோதம்.
தையில பொங்கல் முதல்
மார்கழி நத்தார் வரை
தினம்தோறும் கொண்டாட்டம் தான்
முக்கால திரும்பி போனால்
சுன்னாகம் மல்லாகம் தான்
வட்டார வழக்கு தமிழ்
நிக்காமல் மணம்பரப்பும்